தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வில் இணையும் செங்கோட்டையன்?- அரசியல் விளையாட்டை தொடங்கிய விஜய்

Published On 2025-11-25 07:35 IST   |   Update On 2025-11-25 07:35:00 IST
  • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  • இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபி:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது உண்மையா? அல்லது வதந்தியா? என தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News