தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது உறுதி- சீமான்

Published On 2025-08-16 13:23 IST   |   Update On 2025-08-16 13:23:00 IST
  • பிரதமர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி புகழ்ந்து பேசியது புதிது அல்ல.
  • தூய்மை பணியாளர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நாடகம் நடத்தி உள்ளது.

சென்னை:

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

எங்கள் மூதாதை மாயோன் என்கிற கிருஷ்ணரின் புகைப்படத்தை வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் வணங்கினார்கள்.

பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறதா? எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதால் தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் அமைவதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சீமான், நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தனித்து களம் கண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப இது போன்ற கேள்வியை நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் எனக்கு ஒரே மனைவிதான் ஒரே மனைவிதான் என்று திரும்பத் திரும்ப உங்களிடமும் சொல்ல வேண்டி உள்ளது.

வருகிற சட்டமன்றத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்திக்க உள்ளது. இதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது பற்றி கேட்கிறீர்கள்.

மற்றவர்களின் பலவீனத்தை நம்பி நாங்கள் இல்லை. எங்களது பலத்தையும் வலிமையையும் நம்பியே களத்தில் இருக்கிறோம். நிச்சயம் தமிழகத்தில் தூய்மையான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நம்பிக்கையோடு தேர்தலில் போட்டியிடுகிறோம். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள்.

பிரதமர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி புகழ்ந்து பேசியது புதிது அல்ல. அதே நேரத்தில் நாங்கள் காலம் காலமாக சொல்லி வரும் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க போவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

மீதமுள்ள 3½ ஆண்டுகளும் அதனை அவர் தவறாமல் பின்பற்றி செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாகி விட்டதாக கவர்னர் கூறியிருப்பதற்கு கனிமொழி எம்.பி. மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இருவர் சொல்வதையும் கேட்டுக்கொண்டு அவர்களை ஒழிப்பதற்கான வேலையில் நாங்கள் ஈடுபட இருக்கிறோம். கூலி படம் முதல் நாளில் 150 கோடி வசூல் செய்திருப்பதன் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்கள் மத்தியில் இன்னமும் செல்வாக்குடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நாடகம் நடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டால் அரசாங்கம் எதற்கு என்று தொடர்ந்து நாங்கள் கேட்டு வருகிறோம். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றுவதற்காகவே நாங்கள் களம் கண்டு வருகிறோம். நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தைப் பற்றி சீமான் குறிப்பிடும் போது அந்தக் கூலியும் காலி இந்த கூலியும் காலி என்றார். பின்னர் அவர் கூலி படம் வசூலை பற்றி குறிப்பிட்டு ரஜினிகாந்த் தமிழக மக்கள் மனதில் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News