தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்வேன்- வைகோ

Published On 2026-01-02 14:55 IST   |   Update On 2026-01-02 14:55:00 IST
  • மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
  • வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன்.

திருச்சி:

சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர். அதேபோன்ற எனது இந்த நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சனை எழுந்த போதும், தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.

108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை ஆலயத்திற்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைபயணமாக வந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை முதல் நடைபயணம் மேற்கொண்டேன்.

அதனை தொடர்ந்து 1994-ல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைபயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைபயணம், நல்லிணக்கம் தழைக்க நடைபயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைபயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணைகளை காக்க நடைபயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.

அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் எனபதற்கு ஏற்ப, இந்த தமிழகத்தில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த பயணத்தில் மக்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News