தவெகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்... ஷாக்கில் ஓபிஎஸ்!
- ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
- விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தரப்பு கூறிவரும் நிலையில், அதிமுகவுடன் யார் யார் கூட்டணி? அமமுக, ஓபிஎஸ் தரப்பு, ஆகியோர் அதிமுகவில் இணைவார்களா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் விஜய்யின் தவெகவில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தவெகவுடன் கூட்டணி வைக்க ஏழு கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே வேற்று கட்சியினரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். கடந்த மாதம் செங்கோட்டையன் இணைந்தநிலையில், இன்னும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசிடி பிரபாகர் ஜெயலலிதா தலைமையிலான 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அந்த வகையில் ஜேசிடி பிரபாகரும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நீங்கி தவெகவில் இணைந்துள்ளார்.