தமிழ்நாடு செய்திகள்

நகைக்கடன் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவோம் - வியாபாரிகள்

Published On 2025-05-21 11:15 IST   |   Update On 2025-05-21 11:33:00 IST
  • வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
  • வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது.

தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த மாம்பழம் மற்றும் தக்காளி மொத்த வியாபாரியான தக்காளி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:

வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் அடகு வைக்கும் நகைகளை திருப்ப முழு தொகையும் வங்கியில் செலுத்தி திருப்ப வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான பணத்தை திரட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு மாத வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது

மேலும் ஒவ்வொருவருக்கும், தனது தாய் மற்றும் மனைவியின் பெற்றோர் மூலம் தங்க நகைகள் கிடைக்கிறது. இந்த நகைகளை தங்களுக்குள்ளது என்று எப்படி யாரிடம் சான்று வழங்க முடியும், இது முடியாத செயல், இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

கடந்த காலங்களில் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் கடன் கொடுத்த நிலையில் தற்போது 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தொழிலுக்கு போதுமான பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.

எனது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை பெற அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளேன். இதன் மூலம் வங்கிகளுக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறேன். இனி வரும் நாட்களில் புதிய அறிவிப்புகளால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்னை போன்றவர்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.

நகைக்கு தர உறுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் அதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு உதவுவது போல அமைந்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள என்னை போன்ற நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய அறிவுப்புகளை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தக்காளி ஆறுமுகம் - ஆட்டோ டிரைவர் ஏழுமலை 

வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை கூறுகையில்,

ஆட்டோ ஓட்டும் தொழில் மூலம் சில நேரங்களில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அவசர தேவை மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி உள்ளது.

ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்கும் போது மொத்தமாக பணத்தைக் கட்டி அதனை மீட்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளதால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகைகளை எளிதில் வங்கிகளில் அடகு வைக்க முடியாது. 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய தங்க நகைக்கான ஆதாரத்தை எங்கிருந்து நாங்கள் கொண்டு வருவோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றார்.

Tags:    

Similar News