சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
- பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர்.
- ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் பயணிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக கோவை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் வைத்திருந்த பைகள் உள்ளிட்ட உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 பயணிகள் கொண்டு வந்த பைகளில் 6.713 கிலோ கிராம் எடையுள்ள உயர்ரக கஞ்சா(தண்ணீரில் வளரக்கூடியது) போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபயதுல்லா ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கைதான கேரள பயணிகள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடத்தில் அதே விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் ரூ.18.67 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுங்க இலாகாவிற்கு வரி செலுத்தாமல் அவற்றை ரகசியமாக கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.