மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
- உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
- அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.
'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று காலை கும்பகோணத்திற்கு வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் பாதிப்பு உள்ளானது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சான்று. ஆய்வு என்ற பெயரில் துணை முதலமைச்சர் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்து பார்த்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது, அவர்களது உட்கட்சி பிரச்சினை. இதில் நான் தலையிட விரும்பவில்லை. அமைச்சர் சேகர் பாபு முதலில் கோவில் பிரச்சினையை சரி செய்யட்டும். அதன் பிறகு, கட்சி பிரச்சினையை பார்க்கட்டும்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து பா.ஜ.க.-விற்கு ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு மற்றொரு நாள் பதில் அளிப்பதாக கூறி ஒற்றை வரியில் முடித்தார். வடக்கு, தெற்கு எனவும், மொழிவாரியாக திரித்து பேசுவதும், தமிழகத்தில் வன்மத்தை ஏற்படுத்துவதும், கருணாநிதி காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நானும் டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதனை அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.
உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.