தே.மு.தி.க.வுக்கு மேல்-சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டியது அ.தி.மு.க.வின் கடமை: பிரேமலதா விஜயகாந்த்
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
- வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.
புதுக்கோட்டை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த போது 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபை சீட்டு தருவதாக அ.தி.மு.க. ஒப்புக்கொண்டது. அதன்படி தற்பொழுது எங்களுக்கு அ.தி.மு.க. ராஜ்ய சபை சீட்டு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தே.மு.தி.க.வுக்கு மேல்-சபை எம்.பி. பதவி கொடுக்கவேண்டியது அ.தி.மு.க.வின் கடமை.
பொறுத்தார் பூமி ஆள்வார், என்பதற்கிணங்க பதட்டமோ, அவசரமோ இல்லாமல் தே.மு.தி.க. உள்ளது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். உறுதி அளித்தபடி மேல் சபை எம்.பி. சீட் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று தே.மு.தி.க. பிறகு பார்த்துக்கொள்ளும்.
தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. வரும் ஜனவரிக்குள் எல்லாம் முடிவு செய்யப்படும். 234 தொகுதிகளுக்கும் பூத் வாரியாக கமிட்டி நியமித்து 2 நாளில் தெரிவிக்கப்பட உள்ளது. தே.மு.தி.க. வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கொடுப்பதும் இல்லை, யாரிடமும் அட்வைஸ் பெறுவதும் இல்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும்.
தமிழர்களுக்கு அன்னை தமிழ் மொழி தான். அந்தந்த மாநிலத்திற்கு அவர் அவர்களின் மொழிகள் தாய்மொழி. நமக்கு ஆதி மொழி தமிழ் மொழி. அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையில் ஞானசேகரன் தண்டனை கொடுத்தது வரவேற்கத்தக்கது.
இருப்பினும் ஞானசேகரன் பின்னணியில் யார்? யார்? உடந்தையாக இருந்தார்களோ, அவர்களுக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் ராஜேஷ் காலமானார் என்று செய்தி வேதனை அளிக்கிறது. விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் ராஜேஷ்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாகிர் உள்பட பலர் இருந்தனர்.