தமிழ்நாடு செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- இன்று அல்லது நாளை அறிவிக்கிறார் முதலமைச்சர்

Published On 2025-12-30 11:18 IST   |   Update On 2025-12-30 11:18:00 IST
  • பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
  • பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

சென்னை:

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு 'பை' மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டன.

அதே போல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. இவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.

அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்க உள்ளது. அது ரூ.3 ஆயிரமா? அல்லது ரூ.4 ஆயிரமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது மட்டுமின்றி பொங்கலுக்கு வேட்டி-சேலையும் ரேசன் கடையில் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதன்படி 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 2,22,91,700 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 1,77,22,000 வேட்டியும், 1,77,64,000 சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும்.

அதன் பிறகு பொதுமக்கள் எந்தெந்த தேதிகளில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த டோக்கனில் எழுதி கொடுப்பார்கள். அதன்படி சென்று ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பொங்கல் ரொக்கப் பணம் மற்றும் பரிசு தொகுப்பு விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News