ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்: மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
- கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.
சென்னை:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 26-ந்தேதி இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 27-ந்தேதி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சென்னை எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இருவழி சாலையில் ஒரு பகுதியில் முழுவதும் ஆசிரியர்கள் அமர்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:-
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இதுவரை விடுமுறை நாட்களில் போராடி வந்தோம். இனி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனாலும் நாங்கள் வேலை நாட்களில் விடுமுறை எடுத்து போராட்டத்தை தொடருவோம். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் அமர்ந்து போராடுவோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். புத்தாண்டு, பொங்கல் நாட்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய ஆசிரியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.