போலீஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்- அரியானா டி.ஜி.பி. மீது பரபரப்பு புகார்
- அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார்.
- அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். புரன் குமார். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். புரன் குமாரின் மனைவி அம்னீத்குமாரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் அரியானா அரசில் வெளியுறவு ஒத்துழைப்புத் துறை ஆணையாளர் மற்றும் செயலாளராக உள்ளார்.
அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் ஜப்பான் பயண குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருந்தார். கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்து அவர் நாடு திரும்பினார்.
இந்தநிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் மீது அம்னீத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
போலீசில் அம்னீத்குமார் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
டி.ஜி.பி சத்ருஜீத் கபூர், ரோதக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜர்னியா ஆகியோர் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் எனது கணவரை பொய்யான புகாரில் சிக்க வைக்க சதித்திட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல.
ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை சக்திவாய்ந்த மேலதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தியதன் நேரடி விளைவு ஆகும். அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையால் உடைந்து போன எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அம்னீத்குமார் கூறும்போது, பல ஆண்டு களாக எனது கணவர் அவமானம், துன்புறுத்தலை எதிர்கொண்டார். டி.ஜி.பி கபூரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அற்பமான புகாரில் தன்னை பொய்யாக சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப் படுவதாக எனது கணவர் என்னிடம் தெரிவித்து இருந்தார் என்றார். அம்னீத் குமார் அளித்துள்ள புகார் காரணமாக அரியானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.