தமிழ்நாடு செய்திகள்

#TNAssemblyElection நாளை மறுநாள் பிரதமர் மோடி வருகை: திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதிப்பு

Published On 2026-03-09 15:00 IST   |   Update On 2026-03-09 15:19:00 IST
  • தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
  • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி:

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஏறத்தாழ இறுதி செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க. உருவாக்கியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம. மு.க., த.மா.கா., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தற்போதைய சூழலில் வலுவான கூட்டணி அமைத்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசார கூட்டங்கள் பெரிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் ஒரே மேடையில் கைகோர்த்தனர்.

இதையடுத்து 2-வது முறையாக கடந்த வாரம் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி புதுச்சேரி சென்று அங்கு ஆரோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின்னர் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் இன்னும் சில முக்கிய நகரங்களில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் நாளை மறுநாள் (11-ந்தேதி, புதன் கிழமை) திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இதற்காக திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.

இதில் இந்திய எண்ணெய் கழகம் சார்பில் சென்னை மணலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லூப் ஆயில் திட்டம், குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகத்தின் முக்கிய 4 வழிச் சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட சுரங்க பாதைகள் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 4 வழிச்சாலைகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அதே பகுதியின் பின்புறம் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் தேசிய ஜனநாயகக்கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார்.

இந்த நிகழ்வுகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

பிரசார பொதுக்கூட்டத்திற்கு பின்னர் கார் மூலம் எடமலைப்பட்டி புதூர் வழியாக திருச்சி விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடந்தது.

இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு திருச்சி வந்தது. அதன் ஐ.ஜி. நவ்நீத்குமார் மேத்தா தலைமையில் வந்த அந்த குழுவினர் பஞ்சப்பூரில் அரசு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும், ஹெலிபேடு தளத்தையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் கார் மூலம் பிரதமர் மோடி செல்லும் வழித்தடத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து விமான நிலையம் மற்றும் பஞ்சப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சரவணன், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் வருகையையொட்டி திருச்சி மாநகரில் இரண்டு நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News