#DMK திருச்சியில் தி.மு.க மாநில மாநாடு: தஞ்சாவூரில் இருந்து கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65 தயார் செய்து வாகனங்களில் அனுப்பி வைப்பு
- மாநாட்டில் முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
- காலையிலிருந்தே தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூர்:
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு, பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க சார்பில் திருச்சி சிறுகனூர் பகுதியில் இன்று மாலை மாநில மாநாடு நடைபெறுகிறது.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றுக்கின்றனர்.
மாநாட்டில் முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். காலையிலிருந்தே தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு இடங்களில் இருந்து மதிய உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் அதிகாலை முதல் கலைஞர் அறிவாலயம் எதிரில் உள்ள இடத்தில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.
கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தால்சா அடங்கிய பிரியாணி பேக்கேஜ் செய்யப்பட்டு தஞ்சாவூரில் இருந்து வாகனம் மூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சுமார் 12 ஆயிரம் பேருக்கு கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் 65 தயார் செய்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூரில் மட்டுமே 12 ஆயிரம் பேர்களுக்கு 1300 கிலோ மட்டன், 800 கிலோ சிக்கன் மூலம் மட்டன் பிரியாணி ,சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.