தமிழ்நாடு செய்திகள்

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்கு அதிபர் வெட்டி கொலை - பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2025-06-30 12:15 IST   |   Update On 2025-06-30 12:15:00 IST
  • எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார்
  • கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.

கூவத்தூர் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது.50) இவர் கல்பாக்கம் அடுத்த காத்தாங்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்கு நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்படும் போது காத்தாங்கடை சந்திப்பு பகுதியில் காரில் பதுங்கி இருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மோகன்ராஜை வழிமறித்து கையில் இருந்த பட்டாகத்தி மற்றும் அருவாலால் அவரதே கழுத்து, தோல்பட்டை, முதுகில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டனர்.

இதில் உயிருக்கு போராடிய நிலையில் கொத்துயிரும், கொலையுருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன்ராஜை அப்பகுதியில் கடை வைத்திருப்போர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். தகவலரிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார், இதையறிந்த மர்ம கும்பல் மோகன்ராஜை கொலை செய்ய காத்தாங்கடை சந்திப்பில் காரில் நீண்ட நேரமாக காத்திருந்து, திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார்கள்.

கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த கொலை ஏதேனும் கொடுக்கல் வாங்கல் பணப் பிரச்சனையா? நிலத்தகராரா? பெட்ரோல் பங்கில் ஏதும் பிரட்சனையா? கோயில் விவகாரமா? அல்லது வேறேதும் காரணங்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பெயரில் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, திருக்கழுகுன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கூவத்தூர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் நாவங்கால் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்மீக பக்தரும் பெட்ரோல் பங்கு அதிபருமான மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இ.சி.ஆரில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த கொலை சம்பவம் கூவத்தூர், காத்தாங்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News