பஹல்காம் தாக்குதல் சம்பவம்- உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்வியை காட்டுகிறது: நாராயணசாமி
- காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
- பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம்.
இந்திய பிரதமர் உத்தரவின்படி பாகிஸ்தானில் போர் தொடுத்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல ஆண்டுகாலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல் கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவுப்படி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பேரணி உள்ளிட்டவைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் நடத்திய பயங்கரவாத சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அந்த நாட்டை சேர்ந்த அமைச்சரே உறுதி செய்துள்ளார். திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார்.
இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாகிஸ்தான் செயல்பாடுகள், பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.
மும்பை தாக்குதல் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த தற்போது உள்ள பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டு பிரதமர் என்பவர் 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என அப்போதைய பிரதமரை விமர்சனம் செய்ததை மறக்கமுடியாது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் காவல் துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது. உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.