"தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே எங்கும் கிடையாது... விஜய் கொண்டுவந்த புது திட்டம்' - செல்லூர் ராஜு!
- முதலில் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா?
- அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் எப்படி?
தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மாநிலத்தின் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே விமர்சித்தார். பாஜக தங்கள் கொள்கை எதிரி என்றுக் கூறிகொண்டாலும், அக்கட்சியின் பெயரைக் கூட பயன்படுத்தவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தமிழ்நாட்டின் மற்றொரு பெரும்கட்சியான அதிமுகவை தாக்கி எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக கடந்தமுறை பேசிய விஜய், களத்தில் இருக்கும் கட்சிகளோடு மட்டும்தான் மோதல் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடந்த அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை "ஊழல் சக்தி" என்று விஜய் நேரடியாக விமர்சித்தார். முன்னாள் ஆட்சியாளர்கள் பாஜகவிற்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள், அவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்றும் குறிப்பிட்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை மறந்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. நேற்று விஜய்யை விமர்சித்து அதிமுக ஐடி விங் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை விடப்பட்டது. பாஜக தலைவர்களும் பலர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பதிலளித்துள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,
"அரசியலுக்கு வருகிறார், புதுமுகம் வரட்டும் என நினைத்தோம். நான் உண்மையாக அவரை வரவேற்றேன். ஆனால் யார் ஆதரித்தோமோ, எங்கள் காதையே கடித்தால் நாங்கள் சும்மா இருப்போமா? 41 பேர் இறந்துள்ளனர். எங்காவது இதுபோல் நடந்ததுண்டா? முதலில் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா? உலகத்தில் எங்கும் கிடையாது, இறந்தவர்களின் அழைத்து வீட்டில் துக்கம் விசாரிப்பது.
இது தமிழ்நாட்டில் புதிது. இதுதான் விஜய்யின் புதிய திட்டம். ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளார். அரசியல் இயக்கம் தொடங்கிவிட்டு, அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் எப்படி? இப்போது இருக்கும் புகழை வைத்து அப்படியே மக்களிடம் ஓட்டை வாங்கிவிடலாம் என நினைக்கிறீர்கள். அரசியல் இயக்கம் தொடங்கினாலே மக்களுக்கு களத்தில் சென்று பணியாற்றவேண்டும். பாருங்கள் இப்போதுதான் வந்தார், களத்தில் இறங்கி எவ்வாறு வேலைசெய்கிறார் என மக்கள் பேசவேண்டும்.
வாயில் வடைசுடுவார். ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு உள்ளதா? எந்த வீட்டில் உள்ளது? எத்தனை வீட்டிற்கு சென்று இவர் பார்த்தார்? கணக்கெடுத்தாரா? எல்லாம் பில்டப்தான், கதாநாயகனாக இருந்தவருக்கு பில்டப்தான் கொடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.