தமிழ்நாடு செய்திகள்

விஜய் கட்சியில் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது- தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

Published On 2024-11-15 14:41 IST   |   Update On 2024-11-15 14:41:00 IST
  • முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கினார்.

கட்சி கொள்கைகள், திட்டங்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட விஜய், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்தார்.

விஜய்யின் அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற தொடங்கியது.

புதிய உறுப்பினர்கள் சேர்க்க தொடங்கிய சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர் கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக சேர தொடங்கினர். கட்சியில் இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகமாக சேர்ந்தனர்.

ஒரே நாளில் ஒன்று போல் கட்சியில் இணைவதற்கு முயற்சிப்பதால் இணைய தள சர்வர் முடங்கியது.

இதையடுத்து சில நாட்கள் உறுப்பினர்கள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சர்வர் சரி செய்யப்பட்டு உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது.

இதையடுத்து கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை அடைந்தது.

இந்த நிலையில் கட்சி தலைவர் விஜய் கட்சி கொடியை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விக்கிரவாண்டி வி.சாலை என்ற இடத்தில் கடந்த 27-ந்தேதி மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக சேர்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டி கட்சியில் இணைய தொடங்கினர். இதையடுத்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிகை 93 லட்சத்தை அடைந்தது.

இந்த நிலையில் ஒரே நாளில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் மீண்டும் தமிழகம் முழுவதும் 'சர்வர்' முடங்கியது. இதனால் உறுப்பினர் சேர்க்கை பணியில் தடை ஏற்பட்டது.

இதையொட்டி படிப்படியாக இணைய தள செயலியின் சர்வர் சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் பலர் புதிதாக இணைய தொடங்கினர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக சேர்ந்தோர் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் 1 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சி தொடங்கி சில மாதங்களில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடி நெருங்கி இருப்பது தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News