தமிழ்நாடு செய்திகள்

தமிழக பா.ஜ.க.-விற்கு புதிய தலைவர் தமிழ் புத்தாண்டுக்குள் அறிவிப்பு

Published On 2025-04-01 12:08 IST   |   Update On 2025-04-01 12:08:00 IST
  • மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
  • தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டது.

சென்னை:

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும் தற்போது தமிழகத்தில் அரசியல் களம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சியினர் பற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பது போன்ற பல்வேறு விவரங்களை துல்லியமாக 234 தொகுதிகளிலும் ஆய்வு செய்து அந்த அறிக்கையை அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.

அமித்ஷாவுடனான சந்திப்பின் போதும் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்ணாமலையிடம் அமித்ஷா விவாதித்துள்ளார். தான் எந்த தலைவருக்கும் எதிரானவன் இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்க்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியில் எந்த பணியையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார்.

எனவே அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதை அடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாமலைக்கே மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. மாற்றுவதாக இருந்தால் யாருக்கு கொடுக்கலாம் என்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. இதுவரை நாடார், கவுண்டர், தலித், பிராமணர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்துள்ளார்கள். எனவே பெரும்பான்மையாக இருக்கும் தேவர் சமூகத்துக்கு வழங்கலாம். அதன்படி நயினார் நாகேந்திரனை தேர்வு செய்யலாம் என்கிறார்கள்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் அதிரடியாக பேசக்கூடியவர். கவர்னர் பதவியை உதறிவிட்டு தேர்தல் களத்துக்கு வந்தார். வெற்றி பெறாவிட்டாலும் 2-ம் இடத்துக்கு வந்தார். எனவே அவரை தேர்வு செய்யலாம் என்கிறார்கள்.

அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, "தலைவர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்து விட்டது. வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி ராமேசுவரம் வருகிறார். அவர் வந்து சென்ற பிறகு தமிழ் புத்தாண்டு தினத்தில் (ஏப்ரல் 14) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தில் கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்படும். கேரளாவுக்கும் புதிய மாநில தலைவரை நியமிக்க வேண்டும். எனவே இரு மாநிலங்களுக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு தினத்தில் புதிய தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றனர்.

Tags:    

Similar News