பைக் மீது எனது கார் மோதவில்லை: பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் - திருமாவளவன் விளக்கம்
- திருமாவளவன் வந்த கார் தனது பைக் மீது மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து நேற்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த தனது பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீலான ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எனது வண்டியின் முன்னாள் இருசக்கர வண்டியின் ஒரு இளைஞர் போய் கொண்டிருந்தார். அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் எனது வண்டியை கவனித்து திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு எனது வாகனத்தை நோக்கி வந்து சத்தம் போட்டார்.
நான் நமது வையை நிறுத்தாமல் செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் வாகனம் செல்லமுடியாதபடி அந்த இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
இதை அறிந்து எனது பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அந்த இளைஞரை தள்ளிபோகுமாறு கூறினர். ஆனால் நான் காருக்குள் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டே அந்த இளைஞர் சத்தம் போட்டு பேசிக்கொண்டே இருந்தார்.
நமது கட்சியை சேர்ந்த தோழர்கள் அவரிடம் தள்ளிபோகுமாறு கூறியுள்ளனர். அனால் அவர்களிடமும் அவர் முறைத்து பேசியிருக்கிறார். அப்போது அந்த இளைஞருக்கும் கட்சி தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவப்பட்ட கட்சி தோழர்கள் அந்த இளைஞரை அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அந்த இளைஞரை கூட்டி கொண்டு சென்றனர். இது தான் நடந்தது.
பிரச்னை செய்தது அந்தத் தம்பிதான். இருசக்கர வாகனம் மீது எனது கார் மோதியதாக வெளியான தகவல் தவறு. ஆனால் ஊடகங்கள் இதை பெருக்கி, நாம் திட்டமிட்டே அந்த இளைஞரை அடித்தது போல அவதூறு செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை விசிக தியூனை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.