சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் - அமைச்சர் கே.என்.நேரு
- வருகின்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறும்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சி நிதியை கேட்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி முனைவர் ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தலைமை தாங்கி நூலை வெளியிட்டார்.
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தஞ்சையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தி.மு.க. பற்றி உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பற்றி பேசினார்.
அவர் கடந்த 2014 முதல் அப்படித்தான் பேசி வருகிறார். பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவு எப்போதும் தி.மு.க.வுக்கு தான் உள்ளது. வருகின்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெறும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி நிதியை கேட்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். முதலமைச்சர் எப்போதும் நேருக்கு நேராக தான் பேசுவார். துணிந்து தனது கருத்தை தெரிவிப்பார். சிலரைப் போல் கைகட்டி நிற்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.