நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்: சட்டசபையில் காரசார விவாதம்
- அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
- வேண்டிய நீரை பெறுவதற்கான வழியைத்தான் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழகத்திற்கான பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
நல்ல நட்புறவை பயன்படுத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வும் கலந்து கொண்ட நிலையில் குற்றச்சாட்டுகள் வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதற்கு, நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது, அண்டை மாநில முதல்வர் என்ன விரோதிகளா? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
நான் முதல்வராக இருந்தபோது கேரள முதல்வருடன் பேசினேன், அதன் தொடர்ச்சியாக தான் சொல்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு, நல்லெண்ண அடிப்படையில் தான் ஆலோசனையை சொல்கிறேன். குறை எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டவில்லை, வேண்டிய நீரை பெறுவதற்கான வழியைத்தான் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.