ரெயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு- ஐகோர்ட்
- அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
- 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்து வந்தனர். இந் நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபர் 13-ந்தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த மாணவியை, மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகம்மது ஜின்னா, காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, 3-வது நாள் ரெயில் வரும் வரை காத்திருந்து, ரெயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.