கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலை - முதலமைச்சர் #MKStalin திறந்து வைத்தார்
- இந்தியாவிற்கே பெருமை சேர்ந்த கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க முழுக்காரணம் முதல்வர் தான்.
- 1935-ல் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றது அக்காலத்தில் பெரிதாக பேசப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த "கொடுமுடி கோகிலம்" என அழைக்கப்படும் பாடகி மற்றும் நாடக நடிகையுமான மறைந்த பத்ம ஸ்ரீ கே.பி சுந்தராம்பாளுக்கு அவர் பிறந்த ஊரான கொடுமுடியில் திருவுருச்சிலை அமைக்கப்பட்டது. இதனை, சர்வதேச மகளிர் தினத்தில் அவரது பெருமையை நினைவு கூரும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவிற்கே பெருமை சேர்ந்த கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க முழுக்காரணம் முதல்வர் தான் என்றும், அதனை மகளிர் தினத்தில் திறந்ததில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். மேலும், பத்மஸ்ரீ சுந்தராம்பாளுக்கு உரிய காலத்தில் காலதாமதம் இன்றி சிலை அமைத்த முதல்வருக்கு உறவினர் ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
1969-ல் பத்மஸ்ரீ கே.பி சுந்தராம்பாள் கொடுமுடியில் கட்டிய திரையரங்கு திறப்பு விழாவிற்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் அப்போதைய திரை நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை அழைத்து வந்துள்ளார்.1935-ல் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றது அக்காலத்தில் பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ் கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் வி.சி சந்திரகுமார், கே ஜி வெங்கடாசலம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஈரோடு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார், கொடுமுடி ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சிவக்குமார், முத்துக்குமார் மற்றும் கே.பி. சுந்தராம்பாள் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.