#WomensDay குடும்பத் தலைவிகளின் சுமையை குறைப்பதே முதல் கடமை! - இ.பி.எஸ். வாழ்த்து
- குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
உலக மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!
ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும், விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.
பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.
தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும், மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.