தமிழ்நாடு செய்திகள்

#DMKGovernment தமிழ்நாட்டு மக்களை எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது - அன்புமணி

Published On 2026-03-08 14:53 IST   |   Update On 2026-03-08 14:53:00 IST
  • அரசு ஊழியர்களை தி.மு.க. அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.
  • தி.மு.க.வுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் புகட்டுவார்கள்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பதைப் போலத் தான் தி.மு.க. ஆட்சியில் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் அவற்றால் மக்களுக்கு 10 பைசா கூட பயனில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை தி.மு.க. அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவது, அரசு வேலைகளை வழங்குவது, தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் பணிகளை தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை நனவாகக் கூடியத் திட்டங்கள் ஆகும். ஆனால், இந்த நனவுத் திட்டங்களையே செயல்படுத்தாமல் கனவுத் திட்டங்களாக மாற்றிய தி.மு.க. அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து 2030-ம் ஆண்டுக்குள் கனவுத் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகக் கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்துக்கு போவதாகக் கூறுவதற்கு ஒப்பானதாகும். தமிழ்நாட்டு மக்களை சில நேரம் ஏமாற்ற முடியும். ஆனால், எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது, இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News