கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
- ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருகிறது.
- வரத்து அதிகரிப்பால் பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொருத்து ஒரு கிலோ தக்காளி ரூ..8 முதல் ரூ.11 வரை விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருகிறது. வழக்கமாக 50 முதல் 55 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் தக்காளி, கடந்த சில நாட்களாக 70-க்கும் மேற்பட்ட லாரிகளாக அதிகரித்து உள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர். இதேபோல் வரத்து அதிகரிப்பால் பச்சை காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கோவக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் ஆகிய காய்கறிகள் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.30-க்கும், உஜாலா கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி மொத்த விற்பனை விலை கிலோவில் வருமாறு:- நாசிக் வெங்காயம் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, உஜாலா கத்தரிக்காய் - ரூ.40, ஊட்டி கேரட் - ரூ.40, ஊட்டி பீட்ரூட் - ரூ.40, பீன்ஸ் - ரூ.30, அவரைக்காய் - ரூ.30, வெண்டைக்காய் - ரூ.40, பாகற்காய் - ரூ.30, பன்னீர் பாகற்காய் - ரூ.45, பீர்க்க ங்காய் - ரூ.30, கோவக்காய் - ரூ.30, முள்ளங்கி - ரூ.20, சவ்சவ் - ரூ.10, சுரக்காய் - ரூ.10, முட்டை கோஸ் - ரூ.10, முருங்கைக்காய் - ரூ.80, வெள்ளரிக்காய் - ரூ.15, கொத்தவரங்காய் - ரூ.40, பச்சை மிளகாய் - ரூ.25, காலி பிளவர் ஒன்று - ரூ.10 இஞ்சி - ரூ.40.