தென்சென்னை மக்களுக்கு குட் நியூஸ்... ரெடியாகும் விரிவான திட்ட அறிக்கை : தாம்பரம் - கிண்டி வழியாக வேளச்சேரிக்கு மெட்ரோ ரெயில்
- சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- கிண்டியுடன் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக இணைக்க உதவும்.
சென்னை:
சென்னையில் முதல் கட்டமாக பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடங்கள் வருகிற 2027-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதவிர, ஒவ்வொரு வழித்தடத்திலும் தனித்தனியே நீட்டிப்பு சேவையும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் சென்னை ஐகோர்ட்டு (7 கி.மீ) வழித்தடம் 1-ல் தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி (21 கிலோ மீட்டர்) நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், தென்சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இதற்காக சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவர்கள் 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் சமர்பிக்க உள்ளனர். இதற்காக ரூ.96.19 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிண்டியுடன் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக இணைக்க உதவும். போக்குவரத்து நெரிசலற்ற விரைவான சேவையும் கிடைக்கும். தென்சென்னையில் தினசரி நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ வழித்தடம் ஒன்று நீட்டிப்பு சேவை இருக்கும். இது ஜி.எஸ்.டி சாலை, வேளச்சேரி ரோடு ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடியை குறைக்கும்.
வேளச்சேரி, பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஏராளமான தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதனால் ஜி.எஸ்.டி ரோடு, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசல் மெட்ரோ ரெயில் சேவை மூலம் குறையும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.