கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறுத்தப்படவில்லை - CMRL மேலாண் இயக்குநர் விளக்கம்
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
- மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.