'சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் வீழ்ச்சி கோவை மண்ணிலிருந்து துவங்கும்' - நிதின் நபின்
- திமுகவின் ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
- சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்
பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர்,
'சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி. 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.
இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.
பிரதமர் தலைமையில், ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும்.
ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.
ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழ்நாடு..! வளர்க பாரதம்..! " எனக் குறிப்பிட்டுள்ளார்.