தமிழ்நாடு செய்திகள்
null

'தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்' - நிதின் நபின்!

Published On 2026-01-11 14:52 IST   |   Update On 2026-01-11 14:53:00 IST
  • உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்
  • சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்

பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை நிதின்நபின், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.

பொதுமக்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமாக பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி அங்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடந்தது. ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக கோவை முதலிபாளையத்தில் கோவை கோட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிதின் நபின் கலந்து கொண்டு பேசியதாவது:-

'பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியால் பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளோம். இங்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டசபை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இங்கு 80 சதவீதம் பூத் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது நமக்கான வெற்றியை அளிக்கும்.

ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உள்ளோம். இந்த தேர்தலில் உங்களின் பணியால் தி.மு.க.வை தோற்கடிப்போம். வெற்றியை நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. விவேகானந்தர் கூறியது போல இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும். சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வந்து இருக்கிறோம். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம், மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தி.மு.க. அரசின் பிரதான தோல்வியை கையில் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும். நாம் உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

'பா.ஜ.க. கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும், பலர் வெளியேறுவதாகவும் தொடர்ந்து என்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், கூட்டணியில் தற்போது பா.ம.க. இணைந்து அவர்களுக்கான பதிலை அளித்துள்ளது. பொங்கல் முடிந்த பிறகு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள கூட்டணிகள் வெளியேறும். அடுத்த 80 நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. கட்சியின் ஆணி வேராக பூத் கமிட்டி உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், சிறப்பாக வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பூத் கமிட்டி நிறைவாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். கடந்த 2021 தேர்தலில் சரிவு வந்தது. அதுபோல வரும் தேர்தலில் நடந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலம் பா.ஜ.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.'

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News