இறந்தவர்களுக்கு நியாயம்... இருப்பவர்களுக்கு நீதி - அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு வைரமுத்து கோரிக்கை
- த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
- வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து "இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதி செய்வதுமே அறமாகும்" என்று அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கரூர்ச் சம்பவம் குறித்து
அரசு அமைத்திருக்கும்
தனிநபர் ஆணையத்தின் தலைவர்
நீதிபதி அருணா ஜெகதீசன்
அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்
உயிரிழப்புக்கு ஆளான
41 குடும்பங்களிலும்
நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்
அந்தக் குடும்பங்களில்
வேலை வாய்ப்புக்கு
வயதுடையவர்களையும்
கல்வி கற்கும்
வாய்ப்புடையவர்களையும்
அரசுக்கு நீங்கள்
அறிக்கையில் குறித்து
அறிவிக்க வேண்டும்
பலியானோர் பலரும்
அடித்தட்டு மற்றும்
நடுத்தட்டு வர்க்கத்து
நலிந்தவர்கள்தாம்
வேலைவாய்ப்பும் கல்வியுமே
அவர்களின்
மாபெரும் துயரத்துக்கு
மருந்தாக முடியும்
இறந்தவர்களுக்கு
நியாயம் செய்வதும்
இருப்பவர்களுக்கு
நீதிசெய்வதுமே அறமாகும்
இந்தப் பணியை
நீங்கள் இப்போதே முடித்திருந்தால்
அது சமூக தர்மமாகும்
உங்கள் அறிக்கை
பட்டழிந்தோர் கண்ணீரைத்
தொட்டுத் துடைக்கும்
சுட்டு விரலாகட்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.