ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
- பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் ஜனவரி 5-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.