S.I.R. வேண்டாம் என்று தி.மு.க. கோர்ட்டுக்கு சென்றால் நாங்கள் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்வோம்- ஜெயக்குமார்
- இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க.
- அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முறை திருத்தப் பணிகளை நடத்துவது வழக்கமான ஒன்று தான்.
2002-2004 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணிகள் நடைபெறவில்லை. அன்றைக்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்-தி.மு.க. அப்போதெல்லாம் எதிர்க்காத தி.மு.க. தற்போது எதிர்க்கிறது. இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க.
எஸ்.ஐ.ஆர். வேண்டாம் என்று தி.மு.க. நீதிமன்றம் சென்றால் நாங்கள் (அ.தி.மு.க.) எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம். அனைத்துக் கட்சிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.
இப்பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் தவறு செய்தால் புகார் அளியுங்கள் அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால் சர்வாதிகாரப் போக்கு என சொல்லலாம்.
கட்சி சார்பில் விழிப்பாக இருந்து வாக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இப்பணிகளை அ.தி.மு.க. வரவேற்கிறது.
அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது. அதே நேரத்தில் அவசியமான ஒன்றை அ.தி.மு.க. வரவேற்கும் தமிழகத்தில் வெளிமாநில மக்கள் அமைதியாக இருப்பது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட விதை. தி.மு.க. அதில் வேறுபடுவார்கள். ஆனால் அ.தி.மு.க. சாதி, மத ரீதியாக வேறுபாட்டை ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பது கிடையாது
தி.மு.க.வால் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்த கருத்தை மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். இது பற்றி தி.மு.க. திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆல் தோட்ட பூபதி போல எதற்கெடுத்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிறது.
வரும் தேர்தல் நேர்மையான, நியாயமான தேர்தலாக அமைய வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். வாக்காளர்களை யாராலும் நீக்க முடியாது. இப்பணிகளுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், தேர்தலுக்கு இன்னும் 5 அமாவசை உள்ளது. 2 அமாவாசைக்கு முன்பு கூட மாற்றம் வரலாம். எனவே அந்த நேரத்தில்தான் கூட்டணி பற்றி எடப்பாடியார் முடிவு செய்வார்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் குடியுரிமை சட்டத்தை புகுத்த திட்டம் என மக்களை தி.மு.க. திசை திருப்புகிறது. தி.மு.க.வின் திசை திருப்பும் முயற்சி நிச்சயம் வெற்றி பெற போவதில்லை.
வடமாநிலத்தவராக இருந்தாலும் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவர்கள் வாக்குரிமையை பறிக்க கூடாது. பா.ஜ.க. தொடர்பாக அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து வருகிறார். அண்ணாமலை சொன்ன கருத்து குறித்தும் எடப்பாடியார் பதில் அளிப்பார். அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது.
அமைச்சர் கே.என்.நேரு இலாகாவில் நடைபெற்ற ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். சீமான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அ.தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் எங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சீமான் வேலையை அவர் பார்க்கட்டும் எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். தொடர்ந்து பேசினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றார்.