இந்தியா கூட்டணி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட கூட்டணி.. வலிமையாக உள்ளது- செல்வப்பெருந்தகை
- தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
- தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7-ந் தேதி வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாடு இடத்தை இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் நடைபெற உள்ள வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் மாநாட்டுக்கு கால் கோள் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளேன்.
இந்த மாநாடு ஒரு திருப்பு முனையான மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள். டெல்லியில் இருந்து மேலிட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியிலும், பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றும் புதிது அல்ல. உத்தரபிரதேசத்தில் இதுவரை 5 முறை பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சரிடம் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது கூட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் பிரதமர் மோடி. அவர் வெள்ளை அறிக்கை விடட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்கும்போது இந்த கொலை வழக்கில் சரியான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இணக்கமாக உள்ளது. இந்த கூட்டணி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட கூட்டணி. தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்கக்கோரி சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நலம் கருதி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க நடத்தும் அவரது போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனாலும் அவரது உடல் நலம் முக்கியம்.
ஜி.கே.மூப்பனார் ஒரு காலமும் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்தது கிடையாது. சமீபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கூட காங்கிரஸ் திடலில் தான்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். வெளியேறி உள்ளனர். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.