தமிழ்நாடு செய்திகள்

முதல்முறையாக ஆதரவு கரம்- விஜய் கட்சி கூட்டணியில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டி என அறிவித்த கட்சி

Published On 2026-02-24 11:35 IST   |   Update On 2026-02-24 11:35:00 IST
  • விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
  • தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் தனது ஆதரவாளர் களோடு ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகுவதாகவும், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கும் புதிய கட்சியில் இணைவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராக முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமாரை நியமிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டு கட்சியின் தொடக்க விழா அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் நிறுவன தலைவராக இருந்து எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை தொடங்கி வைத்தார்.

 

பொதுச் செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் கட்சியின் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கட்சியின் தொடக்க விழாவில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே என்றும், தற்போதைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்றும் கூறினார்.

எனினும், விஜய்யின் கொள்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும், மக்களைச் சாதி, மதப் பாகுபாடின்றி சமமாகப் பாவிக்கும் தலைவரான அவரை சட்டமன்ற தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

விஜய் தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால், தங்களது இயக்கத்தைச் சேர்த்தவர்கள் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றும், எவ்வித பேரமும் இன்றி மக்கள் நலனுக்காகவே இந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

கட்சி தொடக்க விழாவில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூறுகையில், இக்கட்சியில் இணையும் தொண்டர்கள் வயது மூப்பு அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், இருவர் சமீபத்தில் இறந்தவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.

விழாவில் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அம்மாள், கவுரி, ஜோதிராமன், ஏ.வஜ்ரவேலு, ஜெ.காமாட்சி கான் ஜெயகாந்தன், டபுள்யூ. எஸ்.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News