தமிழ்நாடு செய்திகள்

ஏழை எளிய மக்களின் நலன் கருதி நகைக்கடன் கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்- இல்லத்தரசிகள்

Published On 2025-05-21 11:01 IST   |   Update On 2025-05-21 11:01:00 IST
  • ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
  • புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திடீர் நகரை சேர்ந்த பூ வியாபாரி தனம் கூறுகையில்,

மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது குண்டு மல்லி தான். நாங்கள் பல தலைமுறைகளாக பூ வியாபாரம் பார்த்து வருகிறோம். என் கணவர் இறந்து 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளை வளர்ப்பதற்காக கடந்த 37 வருடங்களாக பெரியார் பேருந்து நிலையம் அருகே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.

குடும்ப தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறிது சிறிதாக வாங்கிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தால் ஒரு வருடத்திற்குள் நகைகளை திருப்ப வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. மேலும் நகைகளை திருப்ப இயலவில்லை என்றால் நகைகள் மீது கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு மறு அடகு வைக்கும் நடைமுறையும் இருந்தது.

ஆனால் தற்போது நகைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையை செலுத்தி திருப்ப வேண்டுமெனவும், அதன் பிறகு மறுநாளில் மீண்டும் அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இதனால் எங்களைப் போன்ற ஏராளமான நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது இன்றைய விலையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் வாங்கிய தங்கத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுகிறோம். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.

முன்பெல்லாம் நகை வாங்கும்போது ஜி.எஸ்.டி. வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தங்கத்தை அடகு வைக்கும்போது அதற்கான பில்லை சாமானிய மக்களால் எப்படி வங்கியில் தர முடியும். இது நகை அடகு வைப்பவர்களை மிகவும் பாதிக்கும். மொத்தத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் என்னை போன்ற அன்றாட கூலிகளுக்கு நகை அடமானம் வைப்பதையே மறக்கடித்துவிடும் என்றார்.

 

பூ வியாபாரி தனம் - இல்லத்தரசி அஞ்சலி

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி அஞ்சலி கூறியதாவது:-

முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொண்டு வந்தோம்.

ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் நகை அடைமானம் காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும் என வங்கி கூறியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடயை கடன் சுமையை குறைக்க வேண்டியே வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கிறோம். முழுத் தொகை செலுத்தி அதனை எடுக்க முடியாத சூழ்நிலையில் நகைக்கடனுக்காக வட்டியை மட்டும் கட்டி விட்டு அதனை மறுபடியும் வங்கியில் அடமானம் வைத்து வந்தோம்.

ஆனால் தற்போது முழுதொகை மற்றும் அதற்கான வட்டியை முழுவதும் கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் எனக் கூறும் இந்த புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

சில தனியார் வங்கிகள் முழுதொகை மற்றும் அசல் வட்டியை உடனே கட்ட வேண்டும். இல்லையெனில் நகை ஏலத்திற்கு சென்று விடும் கூறி வருகின்றனர்.

இதனால் நடுத்தர குடும்பத்தினர் வங்கியின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து கந்து வட்டியில் கடன் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் நகையை வங்கியில் அடமானம் வைத்து கந்துவட்டி நபர்களுக்கு பணத்தை கொடுத்து வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

ஆகையால் ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்பது எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது என பேசி முடித்தார்.

Tags:    

Similar News