தமிழ்நாடு செய்திகள்

சசிகலா முதல் செங்கோட்டையன் வரை..! அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியல்

Published On 2025-10-31 21:44 IST   |   Update On 2025-10-31 21:44:00 IST
  • அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
  • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.

இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்த சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News