எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியினர் மோதல்
- எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
- அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை உள்ளது. இந்த சிலையை அ.தி.மு.க.வினர் பராமரித்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு, "சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி அ.தி.மு.க." என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்த போர்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வின் 54-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.வினரை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அப்போது சிலையின் முன் பகுதியில் போர்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைத்ததாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்த அ.தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட சம்பவத்தால் நாகர்கோவில் வடசேரியில் பரபரப்பு ஏற்பட்டது.