கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்- இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
- கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விமர்சிப்பதற்கு எந்த தடையும் இல்லை.
- மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மணப்பாறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கரூர் சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று. ஆனால் அந்த சம்பவத்திற்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அந்த சம்பவத்தில் முதல்வர் உடனே கரூருக்கு சென்று அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தி னார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறார்.
எண்ணூர் சம்பவத்தில் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் உயிரிழந்ததை நாங்கள் நேரில் சென்று பார்த்து சம்பவம் குறித்து கேட்டறிந்தோம். தொழி லாளர்கள் நலனில் அரசு அவர்களுக்கு தேவை யானவற்றை செய்து தர வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரிவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விமர்சிப்பதற்கு எந்த தடையும் இல்லை.
கூட்டணியில் அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆகவே கரூர் சம்பவத்தில் திருமாளவன் அவர் கருத்தை கூறி உள்ளார். இருப்பினும் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். கூட்டணிக்கு அப்பால் தேசம்-தேசத்தின் நலம் மீது நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
தனிப்பட்ட முறையில் கவர்னர் மீதோ, பா.ஜ.க. மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. கவர்னர் என்கிற பதவியை வைத்துக் கொண்டு முதல்வரையே கடந்து செல்ல முயற்சிப்பது என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படுகின்ற பயங்கர தாக்குதல். இதை நாங்கள் எதிர்கிறோம். இதற்கு எதிராக தமிழக அரசு ஒரு போரை தொடுத்திருக்கிறது. அது ஜனநாயகத்திற்காக போர்.
இதில் முதல்வருடன் துணை இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.