தமிழ்நாடு செய்திகள்

சென்ட்ரலில் இருந்து 'சென்னை உலா' சுற்றுலா பஸ்கள் புறப்படும் நேரம் அறிவிப்பு

Published On 2026-01-19 13:53 IST   |   Update On 2026-01-19 13:53:00 IST
  • முதல் பஸ் காலை 10 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கும் புறப்படும்.
  • இந்தப் பஸ்களின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பஸ் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம்.

சென்னை:

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை உலா' என்ற சுற்றுலா பஸ் சேவை கடந்த 14-ந் தேதி தொடங்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பார்க்க ஏதுவாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் இயக்கப்பட்ட பஸ்களைப் போன்று 5 பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த பஸ்கள் பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம் செம்மொழிப் பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், பல்லவன் இல்லம் வழியாகச் சென்று மீண்டும் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10, 10.30, 11, 11.30, பகல் 12, 12.20, 12.50, 1.20, 1.50, பிற்பகல் 2.20, 2.50, மாலை 3.20, 3.50, 4.10, 4.35, 5, 5,40, 6.20, 7 இரவு 7.50, 8.30 ஆகிய நேரங்களில் பஸ்கள் புறப்படும்.

முதல் பஸ் காலை 10 மணிக்கும் கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கும் புறப்படும். இந்தப் பஸ்களில் ரூ.50 கட்டண டிக்கெட் எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் எந்த இடத்திலும் ஏறி இறங்கிக்கொள்ளலாம்.

இந்தப் பஸ்கள் வார நாள்களான திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். வார இறுதி மற்றும் மற்றும் அரசு அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

இந்தப் பஸ்களின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பஸ் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி 5 பஸ்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

இவ்வாறு சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News