தமிழ்நாடு செய்திகள்
null

செந்தில்பாலாஜி கைது குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்தாதது ஏன்? - நிர்மல் குமார்

Published On 2026-01-19 18:34 IST   |   Update On 2026-01-19 18:34:00 IST
  • விசாரணை இன்றுடன் முடிந்துவிட்டது.
  • 41 பேரின் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி என அமித்ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அதனைத்தொடர்ந்து அக்கட்சித் தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜனவரி 12 அன்று விஜய்யிடம் முதல் கட்ட விசாரணை 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஜனவரி 19 (இன்று)  சுமார் 5.30 முதல் 6 மணி நேரம் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படலாம், அவர் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படலாம் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி நிர்மல் குமார், 

"சம்பவம் தொடர்பாக என்னென்ன தகவல்கள் தேவைப்பட்டதோ அதனை எங்கள் தலைவரிடம் (விஜய்) கேட்டுத் தெரிந்துகொண்டனர். இன்றுடன் எங்கள் தலைவருக்கு எந்த சம்மனும் இல்லை. விசாரணை இன்றுடன் முடிந்துவிட்டது. இன்றுமுழுவதும் எங்கள் தலைவர்மீதும், கட்சிமீதும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அனைத்தும் பொய்கள். விஜய் கைது, குற்றப்பத்திரிக்கையில் பெயர் போன்ற அனைத்தும் தவறாக தகவல்கள்.

இந்த வழக்கில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என எங்களைவிட ஊடகங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தேவைப்பட்டால் எங்கள் ஒத்துழைப்பை கொடுப்போம். 41 பேரின் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி என அமித்ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இதுதொடர்பாக ஊடகங்கள் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். இதுதொடர்பாக செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என கேள்வி எழுப்பியிருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டாரா என கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் இன்றுகாலை முதல் பல தவறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பபட்டு வருகிறது." என தெரிவித்தார். 

Tags:    

Similar News