பா.ம.க.விற்கு உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் மனு
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
- பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
பா.ம.க. இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில் சட்டசபை தேர்தலில் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது. இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டை நாடிய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ம.க.விற்கு உரிமைகோரி சிவில் மற்றும் ரிட் வழக்குகளை ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மனுவில், பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ரிட் மனுவில், பா.ம.க.வின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.