அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன் - செல்லூர் ராஜூ வரவேற்பு
- தி.மு.க. திட்டங்களை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
- 5 தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்த உடனே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இதற்கிடையே எம்.ஜி.ஆர். பிறந்தநாளான நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், ஆண்களும் இலவசமாக பஸ் பயணம், 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்கள் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இது, 150 நாட்களாக உயர்த்தப்படும். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறுகையில், தி.மு.க. திட்டங்களை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், எடப்பாடி பழனிசாமியின் இந்த நாடகத்தை மக்கள் நம்பபோவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிடவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
5 தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்த உடனே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது. மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.
அப்போது, டி.டி.வி. தினகரனை கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, கூட்டணி தர்மத்தில் இருந்தவர்களை கூப்பிட்டு சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. நினைப்பது தவறு இல்லை. அதை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது. அவர்கள் அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறார்கள் என்று கூறினார்.