தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகையின் புதிய உச்சம்: டாஸ்மாக்-ல் ரூ.850 கோடிக்கு மது விற்பனை

Published On 2026-01-19 13:11 IST   |   Update On 2026-01-19 13:11:00 IST
  • கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
  • போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று 18-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பொங்கலை உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.

அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.

இந்த ஆண்டு மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் மது விற்பனையும் கூடியுள்ளது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாளுக்கான விற்பனை மட்டும் ரூ.519 கோடியாக உயர்ந்தது.

16-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் 15-ந் தேதியே அதிக அளவு மதுபானங்கள் வாங்கி குவித்தனர். இதுவரையில் இல்லாத விற்பனையாக இது பார்க்கப்படுகிறது.

காணும் பொங்கலான 17-ந்தேதி மதுவிற்பனை படுஜோராக நடந்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, விழுப்புரம் மண்டலங்களின் மதுபானங்கள் தேவையான அளவு குவிக்கப்பட்டு இருந்தது.

நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடி இருந்தது. இதற்குக் காரணம் நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றது தான். அதனால் கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். 4 நாட்களில் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் நேற்று வழக்கமான அளவே விற்பனை நடந்து உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

புதிய ரக மதுபானங்களும் அதிக அளவில் கடைகளில் குவிக்கப்பட்டிருந்ததால் தேவையான மது வகைகளை வாங்கி அருந்தினர்.

குறைந்த ரக மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையானது. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மதுபானம் இடம் பெற்று இருந்ததால் ஓட்டல்களில் உள்ள மது பார்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

Tags:    

Similar News