தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகும்- எச்.ராஜா

Published On 2025-06-29 15:00 IST   |   Update On 2025-06-29 15:00:00 IST
  • இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது.

துவாக்குடி:

திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் அரசாங்கம் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரல்வளை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது. தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெறுகிறது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் தமிழகத்தில் டில்லி பாபு, கேரளா ராஜா என பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படிப்பட்ட காங்கிரஸ் உடன்தான் தற்பொழுது தி.மு.க. கூட்டணி வைத்து உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்து பாகிஸ்தான் 700 டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதில் ஒரு டிரோன் மட்டுமே இந்திய எல்லையில் வந்து விழுந்தது. அதுவும் வெடிக்கவில்லை மற்ற டிரோன்கள் வானிலே தகர்க்கப்பட்டது. இனி குழந்தைகளுக்கு கூட சீனாவில் தயாரிக்கப்படும் ஏரோப்ளேன் பொம்மையை வாங்க மாட்டார்கள்.

இந்தியாவில் 550 டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இதில் 100 நிறுவனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் தேவையான ஆயுதங்கள் இருப்பதுடன் வெளிநாட்டிற்கும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

நமது நாட்டில் ராணுவத்தில் ஆகாஷ், பிரமோத் ஆகிய ஏவுகணைகள் உள்ளது. இது 200 கிலோ மீட்டர் தாண்டி உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது. 78 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு காப்பீடு வசதி பெறுகின்றனர்.

தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி எங்கு உள்ளது என்று பிரச்சனை இல்லை. அவர்கள் யார் அதிகம் தருகிறார்களோ அங்கு சென்று விடுவார்கள். வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. ம.தி.மு.க. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டவரை தற்பொழுது தனது கட்சியில் சேர்த்துள்ளது.

பா.ம.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பி.ஜே.பி. தான் காரணம் என செல்வ பெருந்தகை கூறியது பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்றது. அப்படியொரு கேவலமான செயலை அவர் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News