ஜெயங்கொண்டம் அருகே தி.மு.க.-அ.தி.மு.க. மோதலில் 19 பேர் கைது: பதட்டம் நீடிப்பு
- உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது.
- இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமம் வெற்றி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி தேவகி (வயது 40). குவாகம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். அதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி சரோஜா (55) குவாகம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்.
கொளஞ்சி மற்றும் காமராஜ் ஆகியோருக்கு இடையே அரசியல் முன் பகை இருந்து வந்தது. கொளஞ்சி வீட்டின் எதிர்ப்புறம் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகே ஒரு காலி மனை உள்ளது.
இந்த மனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொளஞ்சி மண் கொட்டினார். அப்போது காமராஜ் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி மண் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது. அதில் பிரச்சனைக்குரிய இடம் கொளஞ்சிகே சொந்தம் என உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் கொளஞ்சி நேற்று காலிமனையில் மண் நிரவ ஆரம்பித்தார். அப்போது மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது போலீசாரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்லால் தாக்கி கொண்ட னர். அப்போது கொளஞ்சி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த நபர்களின் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. மேலும் வீடுகள், 4 பைக்குகள் ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டன. உடனே போலீசார் இருதரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதலில் வெடித்த, வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை தடயவியல் நிபுணர் குமாரவேல் தலைமையிலான போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளஞ்சி தரப்பில் கந்தசாமி, தனவேல், அனிதா, ஆனந்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காமராஜ் தரப்பில் காமராஜ், திரிசங்கு, பாலச்சந்திரன்,சங்கர், பரமசிவம், சூர்யா, உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோதலை தவிர்ப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.