ஊழல் விவகாரம்: மத்திய பிரதேச பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவு- செல்வப்பெருந்தகை
- ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
- ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.
இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.
அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.