ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
இளங்கோவன் நேர்மையான மற்றும் தைரியமான தலைவர். வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், காங்கிரசின் கொள்கைகளை பின்பற்றியவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அனைவருக்கும் பெரும் மதிப்பு உண்டு. அனைவரிடத்திலும் பெரும் மரியாதையும் அன்பையும் பெற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பு என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து காங்கிரஸ் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வை.கே. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "தந்தை பெரியாரின் பெயரனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு தாங்கொணா துயரத்தைத் தருகிறது .
பெரியாரின் அண்ணன் ஈ.வி. கிருஷ்ணசாமியின் மகனும், பேரறிஞர் அண்ணாவின் நெஞ்சங் கவர்ந்த தம்பியுமான ஈ.வெ.கி. சம்பத்த்தின் அருமை மகன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பழகுவதற்கு இனிய பண்பாளர். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.
காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.
சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர்.
டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பினை ஏற்று தனது ஆளுமைத் திறனை வெளிப்படுத்தியவர்.
தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட பொழுது நான் பரப்பரை மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்பி அழைத்தார்.
இளங்கோவனின் 70-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினேன்.
கடந்த மாதம் இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்துவிட்டது.
அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தகைசால் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன் . என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தனது இரங்கல் செய்தியில் "அண்ணன்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவெய்திய செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. விசிக மீதும் தலைவர் திருமாவளவன் மீதும் அன்பு கொண்டவர். திராவிட இயக்கக் கொள்கைகளையும் தேசியப் பார்வையையும் சேர்த்து வெளிப்படுத்தியவர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் கால் பதிக்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்டவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவருக்கு எனது அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மக்களவை எம்.பி. தயாநிதி மாறன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு காங்கிரஸ்க்கு பேரிழப்பு என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தகவல்