வளர்பிறை சஷ்டி-அரையாண்டு விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
- 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
- கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
இங்கு முருகனை வழிபடக் கூடிய உகந்த நாளான வளர்பிறை சஷ்டி மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 1 மணி முதல் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட சுமார் 500 மீட்டர் தூரம் வரை காத்திருந்து புனித நீராடி வருகின்றனர்.
மேலும் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த தரிசன வரிசையானது கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மூத்த குடிமக்கள் வரிசையில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்து வருகின்றனர்.
கோவில் வளாகத்தின் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்து வருகிறது. கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல காட்சியளித்தது. மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் புதிய வாகன நிற்கும் இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.