ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
- 1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
- 1984-ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து, இறுதி ஊர்லம் தொடங்கியது.
இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி பேட்டி அளித்தார். அப்போது அவர்," அவருடைய வெற்றிடத்தை யாராலும் எளிதில் நிரப்ப முடியாது.. ஈடு செய்யவே முடியாத இழப்பு" என்றார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய்குமார் அஞ்சலி செலுத்தினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு
சட்டென்று கடந்துபோகும் ஒன்றல்ல
இதயத்தில் நின்று குத்துகிறது.
பெரியார் குடும்பத்திலிருந்து வந்த
ஒரு துணிச்சலான அரசியல் தலைவர்
முகமூடி போடாத கருத்துக்களை
முகம் பார்த்துச் சொல்கிறவர்
பார்த்தால் வேங்கை;
பழகினால் பசு
நல்ல நண்பர்
அவர் மறைவுச் செய்தி
என் மனதில்
ஒரு கறுப்பு நிழலாகப் படிகிறது
அவர் குடும்பமும்
காங்கிரஸ் பேரியக்கமும் மட்டுமல்ல -
பொதுவாழ்க்கையும்
தன் பொதுவெளியில்
ஒரு ராஜகம்பீரனை இழந்திருக்கிறது
ஈரோட்டுத் தொகுதியின்
வெற்றிடம் நிரப்பப்படலாம்;
இதயத்தின் வெற்றிடம்…?
வருந்துகிறேன்;
இரங்குகிறேன்.
ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மனதைத் தாக்குகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார். அவர் பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல்களை உளப்பூர்வமாகத் தெரிவிக்க விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.